திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல்துறை கண்காணிப்பில் இருந்த கைதி உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்ற கைதி, போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த நிலையில், கழிப்பறைக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுவது பல கேள்விகளுக்கு வழிவகுக்கிறது. 24 மணி நேரமும் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த கைதியை கண்காணிப்பதில் எவ்வாறு தவறு ஏற்பட்டது? பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களின் அலட்சியம்தான் இதற்குக் காரணமா அல்லது வேறு பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் காவல்துறை கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கே உயிர் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. எனவே, சங்கரலிங்கத்தின் மரணம் தொடர்பாக நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க தமிழக வெற்றிக் கழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.