நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பெரிய அளவிலான கப்பல்களை கையாளும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, 335.23 மீட்டர் நீளமும், 51 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட எம்.வி. சி.எம்.ஏ. சி.ஜி.எம். தோரியம் என்ற சரக்கு பெட்டக கப்பலை முதன்முறையாக கையாண்டு துறைமுகம் புதிய சாதனையை படைத்துள்ளது. பிரேசிலில் உள்ள சாண்டோஸ் துறைமுகத்தில் இருந்து வந்த இந்தக் கப்பல், 13,000 டி.இ.யு. சரக்கு பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட பெரிய வகை கப்பலாகும். கடல்சார் வர்த்தகத்தில் சரக்கு பெட்டகங்களின் அளவை குறிப்பிட பயன்படுத்தப்படும் அளவீட்டு குறியீடே டி.இ.யு. ஆகும். மேலும், மெத்தனால் மற்றும் கடல்சார் எரிபொருள் என இரு வகையான எரிபொருட்களிலும் இந்தக் கப்பலை இயக்க முடியும். தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கப்பலை வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன் மற்றும் துறைமுக அதிகாரிகள், சரக்கு பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்றனர். கப்பலில் இருந்து மொத்தம் 3,276 டி.இ.யு.சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட உள்ளன. இதில் 1,324 டி.இ.யு. இறக்குமதி சரக்குகளும், 1,952 டி.இ.யு. ஏற்றுமதி சரக்குகளும் அடங்கும். வ.உ.சி. துறைமுகத்தில் இதுவரை கையாளப்பட்ட சரக்கு பெட்டக கப்பல்களில், இதுவே அதிக நீளம் கொண்ட கப்பல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 நிதியாண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான காலகட்டத்தில், வ.உ.சி. துறைமுகம் 3.67 லட்சம் டி.இ.யு. சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 3.62 லட்சம் டி.இ.யு. உடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்தில், இதே காலகட்டத்தில் துறைமுகம் 18.27 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 17.89 மில்லியன் டன் சரக்குகளுடன் ஒப்பிடும்போது, இது 2.10 சதவீத வளர்ச்சியாகும். நீளமான சரக்கு பெட்டக கப்பலை கையாண்டுள்ள இந்த சாதனை, எதிர்காலத்தில் பெரிய கப்பல்களை ஈர்ப்பதற்கும், சரக்கு பெட்டக கையாளுதலை அதிகரிப்பதற்கும், உலகளாவிய சந்தைகளுடனான நேரடி இணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் உதவும் என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.