நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், முக்கிய ஆறுகளில் நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.கூடலூர் பகுதியில் வழக்கமாக ஜூன் மாதம் முதல் நவம்பர் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், நடப்பு ஆண்டில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.கடந்த சில நாட்களாக மழையின் அளவு மேலும் குறைந்துள்ளதுடன், இந்த வாரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. எதிர்பார்த்த அளவில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால், முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதன் தாக்கமாக நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து, விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் பாண்டியாறு, மாயாறு, சோலாடி, பொன்னானி உள்ளிட்ட ஆறுகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சில இடங்களில் ஆற்றுப்படுகையில் பாறைகள் வெளியில் தெரியும் அளவுக்கு தண்ணீர் குறைந்திருப்பதால், எதிர்காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கப்படும் இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்தால், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, பொதுமக்கள் விநியோகிக்கப்படும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவதுடன், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே போதிய அளவு நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.மழைப்பொழிவு இல்லாமல் ஆறுகள் வறண்டு வரும் நிலையில், கூடலூர் பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறை குறித்து கவலை அடைந்துள்ளனர்.