நீலகிரியில் அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த கரடி; பெற்றோர், பொதுமக்கள் அச்சம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

24 Jul 2026 www.thinathulir.com

நீலகிரியில் அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த கரடி; பெற்றோர், பொதுமக்கள் அச்சம்

நீலகிரியில் அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த கரடி; பெற்றோர், பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்துக்குள் கரடி புகுந்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதில் பெற்றோர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.சமீப காலமாக ஊட்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் கரடிகள், கடைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைக்கப்பட்டுள்ள முட்டைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தேடி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சில கரடிகள் மீண்டும் வனப்பகுதிக்குத் திரும்பாமல் மக்கள் வசிக்கும் பகுதிகளின் அருகே சுற்றித் திரிவதால், மனிதர்–வனவிலங்கு மோதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, அதிகரட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. அங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து உள்ளே சென்ற கரடி, உணவுப் பொருட்களை கீழே சிதறடித்து சிலவற்றை உண்டுவிட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறியது.மறுநாள் காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் அங்கன்வாடி மையம் சேதமடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகரட்டியைச் சுற்றி பரந்த அளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால் கரடிகளின் நடமாட்டம் ஏற்கனவே அதிகமாக இருந்ததாக தெரிவித்தனர். இதுவரை தோட்டப் பகுதிகளில் மட்டுமே சுற்றித் திரிந்த கரடிகள் தற்போது அங்கன்வாடி மையங்களுக்குள் கூட நுழையத் தொடங்கியிருப்பது கவலைக்குரியதாக உள்ளது என்றும், இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். , இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் சுற்றித்திரியும் கரடிகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்படாவிட்டால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.