நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வடமாநில இளைஞரிடம் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஊட்டி பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த அந்த இளைஞர், அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்தார். இதனால் ஊட்டி மேற்கு போலீசார் அவரது பையை சோதனை செய்தனர். அதில் சாக்லேட்டுகள் இருந்ததைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சர்பராஸ் அன்சாரி (27) என்பதும், கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவரது பையில் இருந்த சாக்லேட்டுகளில் கஞ்சா கலந்திருந்ததும், அவற்றை விற்பனை செய்ய முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சர்பராஸ் அன்சாரியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.