நீதிபதிகள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

நீதிபதிகள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீதிபதிகள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்தும் வகையில் விதிகளில் மாற்றம் செய்ய தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆகவும், ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆகவும் உள்ளது. இதேபோல் நாடு முழுவதும் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதையும் 62 ஆக உயர்த்த வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சத்தீஷ்கார், கர்நாடகா, மத்தியபிரதேசம், மராட்டியம், சிக்கிம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்கள் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை உயர்த்த ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட 7 மாநிலங்களும் தங்களது சர்வீஸ் விதிகளில் திருத்தம் செய்து, நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.மேலும், 60 வயதை எட்டும் நீதித்துறை அதிகாரிகளின் செயல்திறனை சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகள் மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு 62 வயது வரை பணியில் தொடர அனுமதி வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்த விதிமுறை மாற்றங்களை 2 மாதங்களுக்குள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை, மேற்கண்ட 7 மாநிலங்களில் 60 வயதை நிறைவு செய்த நீதித்துறை அதிகாரிகள், அவர்களின் செயல்திறனை ஐகோர்ட்டு ஆய்வு செய்யும் அடிப்படையில், 62 வயது வரை ஓய்வு பெறாமல் பணியில் தொடர வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு மார்ச் 31-ந் தேதி அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரிகள், வேறு பணி எதுவும் கிடைக்காத நிலையில், மீண்டும் நீதித்துறை பணியில் சேருவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டுகூறியுள்ளது.இதனிடையே, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள், நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை உயர்த்துவது தொடர்பான தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் முடிவு எடுத்து, கோர்ட்டில் கீழ்ப்படிதல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதித்துறையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கும், தற்போது பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள பற்றாக்குறையை குறைப்பது அவசியம் என சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்டது. காலியிடங்கள் காரணமாக பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பது பாதிக்கப்படாமல் இருக்கவும், அனுபவம் வாய்ந்த நீதித்துறை அதிகாரிகளை தொடர்ந்து பணியில் வைத்திருப்பது முக்கியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.மாவட்ட நீதித்துறையினரின் பணிச்சூழல் மற்றும் சேவை விதிமுறைகள் ஐகோர்ட்டுகள் மற்றும் மாநில அரசுகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால், அவர்களின் ஓய்வு வயதை உயர்த்துவது தொடர்பான விவகாரத்தை ஐகோர்ட்டுகளும் மாநில அரசுகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.அதேநேரத்தில், திறமையற்ற அல்லது செயல்படாத அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குவதற்கும், நேர்மை மற்றும் திறமை நிரூபிக்கப்பட்டவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருப்பதற்கும் சில ஐகோர்ட்டுகள் செயல்திறன் மதிப்பீட்டை ஒரு நிபந்தனையாக பின்பற்றி வருவதை சுப்ரீம் கோர்ட்டு வரவேற்றுள்ளது.இதன் மூலம் அனுபவம் வாய்ந்த நீதித்துறை அதிகாரிகளைதக்கவைத்துக் கொள்வதுடன், நீதித்துறைக்கு புதிய தலைமுறை இளம் அதிகாரிகள் வருவதற்கும் வழிவகுக்கும் வகையில் சமநிலையை ஏற்படுத்த முடியும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.