கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள நிலுவை பயிர்க் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள நிலுவை பயிர்க் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மூலம் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இந்த உத்தரவை அனைத்து கூட்டுறவு சங்கங்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில விவசாயிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர்களின் நிலுவை பயிர்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள நிலுவை பயிர்க் கடன் வசூல் தற்போது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை அனைத்து விவசாயிகளும் கவனத்தில் கொள்ளுமாறு அரசு தெரிவித்துள்ளது. மேலும், பயிர்க் கடன் வசூல் தொடர்பாக கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த யாரேனும் விவசாயிகளை தொடர்பு கொண்டால், அந்த நபர் தொடர்பு கொண்ட கைபேசி எண் மற்றும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு வாட்ஸ்அப் எண்ணான 98840 00845-க்கு அனுப்பி புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.