கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என த.வெ.க. கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் மாவட்ட ஆட்சியராக இருந்திருந்தால், இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களை என்கவுன்டர் செய்திருப்பேன். வீட்டுக்கே வந்து பிரச்சினை செய்பவர்களை எப்படி எதிர்கொள்வது? அவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க முடியுமா? அடித்து, உதைத்து, சுட்டுத் தள்ளியிருப்பேன். இந்தச் சம்பவத்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குக்கூட பாதுகாப்பு இல்லை. சாதாரண பொதுமக்களும் பாதுகாப்பற்ற சூழலில்தான் வாழ்ந்து வருகின்றனர்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.