முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானின் அவதார தினமாகக் கருதப்படும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று (14.9.2026) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்து வருகின்றனர். இதனால் வழக்கமான நாட்களை விட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் பக்தர்கள், சிலைகளை வைத்து அலங்கரித்து பூஜை செய்து வருகின்றனர். விநாயகருக்கு விருப்பமானதாக கருதப்படும் கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் உள்ளிட்ட பல்வேறு நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. இதனிடையே, கோவில்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 1,562 சிலைகளை நிறுவி வழிபாடு நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அந்தந்த இடங்களில் காலை முதலே சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சென்னை புறநகர்ப் பகுதிகளில் சுமார் 1,500 சிலைகள் வரை நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற உள்ளது. புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் ஸ்ரீ கற்பக விநாயகர் ராஜ அலங்காரத்தில் தங்கக் கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தெப்பக்குளத்தில் அங்குசதேவருக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றது. இன்று மதியம் மூலவருக்கு முக்குறுணி மோதகம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. கற்பக விநாயகரை தரிசிப்பதற்காக அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலில் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்த நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலைத் தவிர்த்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகப் பெருமான் இன்று மாணிக்க அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். கோவை முந்தி விநாயகர் கோவிலிலும் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை வழிபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலிலும் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மூலவர் விநாயகப் பெருமானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவர் விநாயகர் கற்பக விருட்ச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 16,000 லட்டுகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் கோவில்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர், காவல்துறை அனுமதி அளித்துள்ள வழித்தடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. சென்னையில் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி, சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் முக்கிய நீர்நிலைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வீடுகளில் வைத்து வழிபடுவதற்கான சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.