இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (நவம்பர் 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நேருவின் தொலைநோக்குப் பார்வையையும் நாட்டிற்கான அவரது கனவுகளையும் நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, நேருவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் சுதந்திரம் என்பது இறுதி இலக்காக இல்லாமல், நாட்டின் புதிய வளர்ச்சிப் பயணத்திற்கான தொடக்கப் புள்ளியாகவே நேரு கருதினார் என்று தெரிவித்துள்ளார். சுயராஜ்ஜியம் என்பது ஆட்சியதிகாரத்தைப் பெறுவது மட்டுமல்ல; நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்று தனது பொறுப்பை நிறைவேற்றுவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பன்முகத்தன்மையை இந்தியாவின் பலமாகவும், ஜனநாயகத்தை நம்பிக்கையின் அடையாளமாகவும், சமத்துவத்தை நாட்டின் அடித்தளமாகவும் நேரு கருதியதாக ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் சிந்தனை, நவீனத்துவம், முற்போக்கு அணுகுமுறை மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவு இன்றும் நமக்கு வழிகாட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தகைய நவீன இந்தியாவைக் கட்டமைப்பதற்காக நாம் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளே பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என்றும் ராகுல் காந்தி தனது பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார்.