திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், நவம்பர் மாதத்திற்கான நூல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என நூற்பாலை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் கடந்த மாத விலையிலேயே நூல் விற்பனை தொடர்கிறது. திருப்பூரின் பனியன் உற்பத்தித் தொழிலில் நூல் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. பருத்தி பஞ்சின் விலையை அடிப்படையாகக் கொண்டே நூலின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்ததால் நூல் விலையும் அதிகரித்து வந்தது. இதற்கிடையே, உள்நாட்டில் நிலவும் பருத்தி தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பஞ்சுக்கான இறக்குமதி வரிச் சலுகை, டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு பருத்தி அறுவடை சீசனும் தற்போது தொடங்கியுள்ளது. இதனால் வரும் நாட்களில் பஞ்சு விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பருத்தி பஞ்சு தட்டுப்பாட்டைச் சமாளிக்க இறக்குமதியை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் பஞ்சு விலையில் பெரிய மாற்றம் இல்லாததால், நவம்பர் மாதத்திற்கான நூல் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை என நூற்பாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நவம்பர் மாத நூல் விலை விவரம் (ஒரு கிலோவுக்கு, வரிகள் நீங்கலாக): செமி கோம்டு ரகம்: - 20-ம் நம்பர் – ரூ.295 - 25-ம் நம்பர் – ரூ.300 - 30-ம் நம்பர் – ரூ.305 - 34-ம் நம்பர் – ரூ.317 - 36-ம் நம்பர் – ரூ.324 - 40-ம் நம்பர் – ரூ.331 கோம்டு ரகம்: - 20-ம் நம்பர் – ரூ.305 - 25-ம் நம்பர் – ரூ.310 - 30-ம் நம்பர் – ரூ.315 - 34-ம் நம்பர் – ரூ.327 - 36-ம் நம்பர் – ரூ.334 - 40-ம் நம்பர் – ரூ.341 நவம்பர் மாதத்திலும் நூல் விலை உயர்த்தப்படாததால் திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் மாதங்களிலும் பருத்தி பஞ்சின் விலை உயராமல் நிலையாக நீடித்தால், நூல் விலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.