2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினரான நவநீதம் பிள்ளைக்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த 5-ம் தேதி தொடங்கின. மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான விருதுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமைதி மற்றும் சர்வதேசச் சட்டத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் 'நவி' பிள்ளைக்கு 2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. இதையடுத்து, டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் நவநீதம் பிள்ளைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது பதிவில், அமைதி மற்றும் சர்வதேசச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஆற்றிய பங்களிப்புக்காக நோபல் பரிசுக்குத் தேர்வாகியுள்ள நவநீதம் பிள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீதி, சமத்துவம், மனிதநேயம் ஆகிய உயரிய கொள்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் அவரது பொதுப்பணியும், அமைதியான உலகை உருவாக்குவதற்கான முயற்சிகளும் எதிர்காலத்திலும் சிறப்பாகத் தொடர வேண்டும் என வாழ்த்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.