நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரப் பகுதிக்கு அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த இந்தியப் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார். இரண்டு ஹெலிகாப்டர்களின் விமானிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். நேபாளத்தைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனங்களான 'பிஷ்டெயில் ஏர்' மற்றும் 'ஏர் டைனஸ்டி' நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) எவரெஸ்ட் பேஸ் கேம்ப் செல்லும் வழியில் சுமார் 14,340 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. சோலுகும்பே மாவட்டத்தில் உள்ள பெரிச்சே ஹெலிபேடில் காலை 9.20 மணியளவில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றன. அப்போது எதிர்பாராதவிதமாக இரு ஹெலிகாப்டர்களின் இறக்கைகளும் ஒன்றோடொன்று பலமாக மோதின. இதில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் கீழே விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில், பிஷ்டெயில் ஏர் நிறுவன ஹெலிகாப்டரில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த வசந்த் குமார் பாலராமராமுடு (47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நியூசிலாந்து குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சைலேஷ் கிருஷ்ணா படேல் (49) என்பவர் பலத்த காயமடைந்தார். விபத்தில் சிக்கிய இரண்டு ஹெலிகாப்டர்களின் விமானிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த சைலேஷ் கிருஷ்ணா படேல் மற்றும் இரண்டு விமானிகளும் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள மெடிசிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும், உள்ளூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது ஹெலிகாப்டர்களில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். எவரெஸ்ட் சிகரப் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.