பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய தலைமைத்துவம் குறித்த கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குநர் மோகன் ஜி அவரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ், தற்போது 10-வது சீசனை எட்டியுள்ளது. கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி நாட்களில் போட்டியாளர்களுடன் உரையாடும் அவர், நிகழ்ச்சியில் நடைபெறும் விஷயங்கள் மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி, பிக் பாஸ் வீட்டில் தலைவராக இருந்த ஷாகிதா குறித்து பேசும்போது, தலைமைத்துவம் தொடர்பாக விஜய் சேதுபதி சில கருத்துகளை தெரிவித்தார். பொறுப்புகளை ஏற்காமல் பிரச்சினைகளுக்கு மற்றவர்களைக் குற்றம்சாட்டி விலகிச் செல்வது தலைமைப் பண்பாக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார். விஜய் சேதுபதி பேசிய இந்த பகுதி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவரது கருத்துகள் முதல்-அமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, விஜய் சேதுபதி தொடர்பாக ஏற்கனவே எழுந்திருந்த விமர்சனங்களையும் சிலர் மீண்டும் பகிரத் தொடங்கினர். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டி, விஜய் சேதுபதி முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்ததாக எக்ஸ் தளத்தில் பலர் கருத்து பதிவிட்டனர். இதனால் இந்த விவகாரம் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளானது. இதனிடையே, இந்த சர்ச்சை தொடர்பாக விஜய் டிவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. விஜய் சேதுபதியின் கருத்துகள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சூழலை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள நபர்களுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக அதிமுக எம்.பி. இன்பதுரை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி விஜய் சேதுபதியின் கருத்துகளை விமர்சித்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் இதுபோன்ற அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்திருக்க வேண்டும் என்றும், ஒருவரை விமர்சிக்கும்போது நேரடியாக அவரது பெயரை குறிப்பிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு முதல்வரை பயன்படுத்துவது தவறு எனவும் மோகன் ஜி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் அரசு நடத்திய விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு அந்த ஆட்சியைப் பாராட்டிப் பேசியதாகவும், அதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அரசை கடுமையாக விமர்சித்ததாகவும் குறிப்பிட்டார். தற்போது விஜய் தலைமையிலான ஆட்சியில் முதல்வரை கீழ்த்தரமாக விமர்சித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் விஜய் சேதுபதி திமுகவை சேர்ந்தவர் என்பது வெளிப்படையாகியுள்ளதாக மோகன் ஜி தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.