பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டதால், சமீபத்திய ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் அவர் அமர்ந்தபடியே தொகுத்து வழங்கினார். 83 வயதாகும் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் 18-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மேடையின் நடுவில் நின்றபடி ரசிகர்களிடம் உரையாற்றும் அவர், சமீபத்திய எபிசோடில் அமர்ந்தபடியே நிகழ்ச்சியை தொடங்கினார். இதற்கான காரணத்தை அவரே நிகழ்ச்சியில் விளக்கினார். படப்பிடிப்புக்கு முந்தைய நாள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக எழுந்து நிற்பதில் சற்று சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், தனது காயம் குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறினார். இந்தி திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் அமிதாப் பச்சன், ‘ஷோலே’, ‘தீவார்’, ‘டான்’, ‘அமர் அக்பர் அந்தோணி’, ‘பிளாக்’, ‘பிகு’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக 4 தேசிய திரைப்பட விருதுகள், தாதாசாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். திரைப்படங்களைத் தாண்டி தொலைக்காட்சியிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அவர், ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியை நீண்ட காலமாக தொகுத்து வழங்கி வருகிறார். அமிதாப் பச்சனின் கம்பீரமான குரலும், தனித்துவமான நிகழ்ச்சி தொகுப்பு பாணியும் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன. அவரது மகன் அபிஷேக் பச்சனும் பாலிவுட்டில் நடிகராக உள்ளார்.