தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நகராட்சித் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின்போது நகராட்சித் துறையில் 2,538 பணியிடங்களுக்கு நடைபெற்ற நியமனங்களில் ரூ.634 கோடி லஞ்சமாகப் பரிமாறப்பட்டதாகக் கூறி, அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அப்போது நகராட்சித் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். அதில், உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு தனது தரப்பு வாதங்களைக் கேட்கவில்லை என்றும், எனவே ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கே.என்.நேருவின் மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளையில், மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.