விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் சுமார் 2 லட்சத்து 31 ஆயிரத்து 450 பேர் பயணம் செய்துள்ளனர். தொடர் விடுமுறை நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பயணிகள் சிரமமின்றி சென்னை திரும்பும் வகையில், வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 14-ம் தேதி 2,240 சிறப்பு பஸ்கள் இன்று (14-ம் தேதி) பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு 2,240 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திருச்சியில் இருந்து 255, மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து 300, சேலத்தில் இருந்து 200, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூரில் இருந்து 195, கோயம்புத்தூரில் இருந்து 50, திருநெல்வேலியில் இருந்து 50, நாகர்கோவிலில் இருந்து 50, தூத்துக்குடியில் இருந்து 50, தென்காசியில் இருந்து 50, கும்பகோணத்தில் இருந்து 225, திருவண்ணாமலையில் இருந்து 325, விழுப்புரத்தில் இருந்து 185 மற்றும் இதர பகுதிகளில் இருந்து 305 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 15-ம் தேதி 1,325 சிறப்பு பஸ்கள் நாளை (15-ம் தேதி) மேலும் 1,325 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, திருச்சியில் இருந்து 105, மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து 75, சேலத்தில் இருந்து 75, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூரில் இருந்து 200, கோயம்புத்தூரில் இருந்து 20, திருநெல்வேலியில் இருந்து 10, நாகர்கோவிலில் இருந்து 10, தூத்துக்குடியில் இருந்து 15, தென்காசியில் இருந்து 10, கும்பகோணத்தில் இருந்து 125, திருவண்ணாமலையில் இருந்து 175, விழுப்புரத்தில் இருந்து 85 மற்றும் இதர பகுதிகளில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதன்மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மட்டும் 14 மற்றும் 15-ம் தேதிகளில் மொத்தம் 3,565 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், மாதவரம் பேருந்து நிலையத்திற்கு 160 சிறப்பு பேருந்துகளும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 370 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதன்படி, மொத்தமாக 4,095 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னைக்குள் கூடுதல் மாநகர பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பயணிகள், அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விரைவாகவும் எளிதாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்பு பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகள் இயக்கப்படுகின்றன. நாளை அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை சென்டிரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் இருந்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.