தொடர் விடுமுறை எதிரொலி: குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
17 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 17 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தொடர் விடுமுறை எதிரொலி: குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறை எதிரொலி: குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு அருவிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் நிலவும். சில ஆண்டுகளில் செப்டம்பர் மாதம் வரையிலும் சீசன் நீடிக்கும். அக்டோபர் மாதம் தொடங்கிய பின்னரும் மழைப்பொழிவைப் பொறுத்து அருவிகளில் தண்ணீர் வரத்து இருக்கும். ஆனால், தென்மேற்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாததால், கடந்த மூன்று மாதங்களாக குற்றாலத்தில் சீசன் எதிர்பார்த்த அளவுக்குக் களைகட்டவில்லை. பல நாட்களில் அருவிகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டியது. சில நேரங்களில் நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. போதிய மழை இல்லாத நாட்களில் அருவிகள் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் குற்றால அருவிகளில் தற்போது சீரான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால், அங்கு குவிந்துள்ள மக்கள் உற்சாகமாகக் குளித்து மகிழ்கின்றனர். தொடர் விடுமுறை காரணமாக அடுத்தடுத்த நாட்களிலும் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.