ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நிகழ்ச்சிகள் வரும் 28-ந்தேதி தொடங்குகின்றன. அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா ஆரம்பமாகிறது. தேவர் நினைவாலய அறங்காவலர் குழுத் தலைவர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் முதல் நாளான 28-ந்தேதி ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை மற்றும் தேரோட்டம் நடைபெறுகின்றன. தொடர்ந்து, 29-ந்தேதி அரசியல் விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேவர் குருபூஜை 30-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை நடத்தப்படுகிறது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் மரியாதை செலுத்தப்படுகிறது. காலை 9 மணியளவில் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர். முதல்-அமைச்சர் மற்றும் பல்வேறு தலைவர்கள் விழாவில் பங்கேற்க உள்ளதால், நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, முதல்-அமைச்சர் விஜய் வரும் 30-ந்தேதி காலை மதுரைக்கு வருகிறார். கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மருது பாண்டியர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த உள்ளார். அதன்பிறகு, வேனில் சாலை வழியாகப் புறப்பட்டு, வழிநெடுகிலும் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றபடி பசும்பொன்னுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.