தேனி மாவட்ட சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டிருந்த 17 தனிப்படைகளின் எண்ணிக்கை தற்போது 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறைக் காவலர்கள் மீது தாக்குதல்? தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை செயல்பட்டு வருகிறது. விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இந்தச் சிறையில், காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு கைதிகளில் சிலர் ஒன்றிணைந்து சிறைக் காவலர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து சிறைக் காவலர்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். 4 கைதிகள் கைது; 13 பேருக்குத் தேடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பிரவீன் கவுதம் உத்தரவின் பேரில், தேக்கம்பட்டி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தப்பியோடிய கைதிகளைப் பிடிப்பதற்காக மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட நடவடிக்கையில், தப்பியோடியவர்களில் பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, இன்று காலை ராஜா சிக்கந்தர், சிலம்பரசன், ராஜ்குமார் ஆகிய மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை நான்கு கைதிகள் பிடிபட்டுள்ள நிலையில், எஞ்சிய 13 பேரையும் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 25 தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்களைப் பிடிக்க முதலில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தற்போது தேடுதல் நடவடிக்கையை விரிவுபடுத்தும் வகையில், தனிப்படைகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6 டிஎஸ்பிக்கள் மற்றும் 20 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் செயல்படும் தனிப்படை போலீசார், கிராமம் கிராமமாகச் சென்று கைதிகளைத் தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாகனச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேலும், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். மதுரை, விழுப்புரம் மாவட்டங்களிலும் போலீசார் உஷார் தப்பியோடிய கைதிகளில் பலர் மதுரை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்த இரு மாவட்டங்களிலும் போலீசார் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தப்பியோடிய அனைவரையும் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.