தேனி: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கைதி, போலீசாரை ஏமாற்றி கோர்ட்டு சுவர் ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் மீது கடந்த 2022-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தேனி மாவட்ட அமர்வு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. வழக்கு விசாரணைக்கு கார்த்திக் ஆஜராகாததால், அவரை கைது செய்ய நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். இதையடுத்து போலீசார் தேடி அவரை கைது செய்தனர். பின்னர் போலீஸ் ஏட்டுகள் நாகராஜன், முத்துக்குமார் ஆகியோர் கார்த்திக்கை லட்சுமிபுரத்தில் உள்ள தேனி மாவட்ட அமர்வு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது போலீசாரின் கவனத்தை மீறி கார்த்திக் கோர்ட்டு சுவர் மீது ஏறி குதித்து தப்பிச் சென்றார். அவரை போலீசார் விரட்டிச் சென்றபோதும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஏட்டு நாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார்த்திக்கை தேடி வருகின்றனர்.