தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-வது அணியை உருவாக்க திமுக முயற்சி..!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

14 Sep 2026 www.thinathulir.com

தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-வது அணியை உருவாக்க திமுக முயற்சி..!

தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-வது அணியை உருவாக்க திமுக முயற்சி..!

மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து, ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திமுக நாடாளுமன்ற குழுத்தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி, மும்பை பந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு சென்ற கனிமொழியை உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த சந்திப்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனில் தேசாய், மிலிந்த் நர்வேக்கர் ஆகியோரும் பங்கேற்றனர். சந்திப்பின்போது, நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதா குறித்தும், இந்த விவகாரத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிராந்திய மற்றும் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம், எதிர்கால அரசியல் சவால்களில் அவற்றின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சரத்பவார் மற்றும் அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரையும் கனிமொழி டெல்லியில் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க திமுக திட்டமிட்டு வருவதற்கான தொடக்கமாகவே இந்த சந்திப்புகள் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: உத்தவ் தாக்கரேவை கனிமொழி சந்தித்தபோது, தென் மாநிலங்களை பாதிக்கும் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்தும், இதற்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவது தொடர்பாகவும் பேச்சு நடைபெற்றுள்ளது. சென்னையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்ற நிலையில், திமுக அதனை புறக்கணித்தது. இதேபோன்று மராட்டியத்திலும் காங்கிரஸ் கட்சிக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், மூன்றாவது அணியை உருவாக்கும் நோக்கில் பல்வேறு மாநில கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க கனிமொழி திட்டமிட்டுள்ளார். அடுத்ததாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் நிறைவடைந்த பின்னர், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் கனிமொழி சந்திக்க உள்ளார். இதன் மூலம், தேசிய அளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.