தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படான்செரு காவல் எல்லைக்குட்பட்ட பெத்தகஞ்சர்லா கிராமத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஏற்பட்ட விபத்தில் 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். படான்செரு பகுதியில் செயல்பட்டு வரும் ஷிரீஷா அறக்கட்டளை அனாதாசிரமத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று (புதன்கிழமை) மாலை விநாயகர் சதுர்த்தி வழிபாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிலையை கரைப்பதற்காக 8 மாணவர்கள் பெத்தகஞ்சர்லா கிராமத்தில் உள்ள நேரேடு செருவு ஏரிக்குச் சென்றனர். அப்போது மாலை நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், சாலைப் பணிகளுக்காக ஏரியின் உள்ளே தோண்டப்பட்டிருந்த ஆழமான குழி இருப்பது மாணவர்களுக்கு தெரியவில்லை. இதனால் அவர்கள் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குள் சென்றனர். நீச்சல் தெரியாத நரசிம்மா (21), தேஜா (17), சித்தார்த்தா (17), கணேஷ் (18), சுமந்த் ரெட்டி (17), உதய் கிரண் (22) ஆகிய 6 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நீரில் மூழ்கிய 6 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். பின்னர் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தெலங்கானா முதலமைச்சர் ஏ. அனுமுலா ரேவந்த் ரெட்டி மற்றும் மாநில ஆளுநர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் நீர்நிலைகளில் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போலீஸ் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக படான்செரு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.