தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக கவிஞர் வைரமுத்து இணைந்துள்ளார். சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். சங்கத்தின் சமீபத்திய தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள், வைரமுத்துவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் சங்கத் தலைவர் மற்றும் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் மற்றும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் மற்றும் இயக்குநர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் மற்றும் பாடலாசிரியர் சினேகன், செயற்குழு உறுப்பினர் மற்றும் இயக்குநர் நவீன் ஆகியோர் பங்கேற்றனர். பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் எழுத்துத் துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் வைரமுத்து, எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்து வழிகாட்ட வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற அவர், சங்கத்தில் உறுப்பினராக சேர சம்மதித்தார். சங்க விதிமுறைகளின்படி ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்தி, ஆயுட்கால உறுப்பினராக அவர் முறைப்படி இணைந்தார். இதற்கான உறுப்பினர் படிவத்தையும் கட்டணத் தொகையையும் சங்க நிர்வாகிகளிடம் நேரில் வழங்கினார். வைரமுத்து போன்ற மூத்த படைப்பாளி சங்கத்தில் உறுப்பினராக இணைந்திருப்பது, எழுத்தாளர்கள் அமைப்புக்கு கிடைத்துள்ள பெருமையாகும் என தலைவர் சேரன் மற்றும் பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு தமிழ் திரையுலகினர் மற்றும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக சங்கத் தலைவர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரமுத்துவை சங்கத்தின் குடும்பத்தில் இணைத்துக் கொண்டதில் பெருமை கொள்வதாகவும், அவரை அவரது இல்லத்தில் காலை 10 மணிக்கு சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை ஆண்டுகள் சங்கத்தில் ஏன் இணையவில்லை என நிர்வாகிகள் கேட்டபோது, தற்போது மனப்பூர்வமாக இணைவதாக வைரமுத்து தெரிவித்ததாகவும் சேரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.