தென்காசி மாவட்ட மத்திய நூலகத்தில் அகல்விளக்கு பதிப்பகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 2,200 போலி நூல்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் போலி நூல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தென்காசி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் மாவட்ட மத்திய நூலகத்திலும் ஊழியர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது அகல்விளக்கு பதிப்பகத்திடம் இருந்து வாங்கப்பட்ட சுமார் 2,200 போலி புத்தகங்கள் இருப்பது தெரியவந்தது. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதை உறுதி செய்த பின்னர் அவற்றை அகற்றியதாக நூலக ஊழியர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுக ஆட்சிக்காலத்தில், இந்த நூல்கள் அகல்விளக்கு பதிப்பகத்திடம் இருந்து ரூ.27 லட்சத்துக்கு வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பிற பதிப்பகங்களுடன் ஒப்பிடும்போது அகல்விளக்கு பதிப்பகத்துக்கு கொள்முதல் தொகை விரைவாக வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிவேதா அன்பழகன், நிவேதா சுப்பையா, மனிஷா சரவணன், மனிஷா ஆகாஷ், மனிஷா அர்ஜுன் ஆகிய பெயர்களில் இந்தப் போலி நூல்கள் நூலகத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.