தென்காசி மாவட்டம் கடையம் அருகே, வீட்டிற்கு தனிப்பட்டா வழங்குவதற்காக ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். கடையம் அருகேயுள்ள லட்சுமியூரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவருக்குச் சொந்தமாக 22 சென்ட் நிலம் உள்ளது. இதில் அமைந்துள்ள வீட்டிற்கு வெங்கடாம்பட்டி பகுதி-2 கிராமத்தில் கூட்டுப்பட்டா இருந்து வந்துள்ளது. அந்த வீட்டை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற முயன்றபோது, தனிப்பட்டா சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தாமோதரன் ஆன்லைன் வாயிலாக தனிப்பட்டா கோரி விண்ணப்பித்ததுடன், வெங்கடாம்பட்டி பகுதி-2 கிராம நிர்வாக அலுவலர் சேர்மப்பாண்டியனிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளார். சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, நில அளவையருடன் சென்ற சேர்மப்பாண்டியன் சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்துள்ளார். அப்போது, தனிப்பட்டா வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று தாமோதரன் தெரிவித்த நிலையில், இறுதியாக ரூ.4 ஆயிரம் கொடுக்க வேண்டும் என சேர்மப்பாண்டியன் கூறியுள்ளார். இதற்கிடையே, கடந்த 31-ம் தேதி தாமோதரனை செல்போனில் தொடர்புகொண்ட சேர்மப்பாண்டியன், தனிப்பட்டா தயாராகிவிட்டதாகவும், பணத்தைச் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இருப்பினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத தாமோதரன் பணத்தை வழங்கவில்லை. மேலும், நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அவரை வரவழைத்த சேர்மப்பாண்டியன், பணம் கொடுக்காதது தொடர்பாகக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தாமோதரன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ.4 ஆயிரத்தை போலீசார் தாமோதரனிடம் வழங்கி, அதை சேர்மப்பாண்டியனிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி, நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்ற தாமோதரன், அங்கிருந்த சேர்மப்பாண்டியனிடம் பணத்தைக் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் சூப்பிரண்டு பால்சுதர் தலைமையில் அங்கு மறைந்திருந்த போலீசார், லஞ்சம் பெற்ற சேர்மப்பாண்டியனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்பட்டா வழங்குவதற்காக லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.