தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கார் மோதிய விபத்தில் கோவில் பூசாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியைச் சேர்ந்த சீனித்துரை (56), கோவில் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை கடையநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், சீனித்துரையின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சீனித்துரை, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த சீனித்துரையின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.