தூத்துக்குடியில் கனமழை: வெள்ளக்காடான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தூத்துக்குடியில் கனமழை: வெள்ளக்காடான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

தூத்துக்குடியில் கனமழை: வெள்ளக்காடான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கியச் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சில மணி நேரங்கள் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுபோல் காட்சியளித்தன. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் மழையால் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, வி.வி.டி. சிக்னல், தற்காலிகப் பேருந்து நிலையம், சண்முகபுரம் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளிலும் பிரதான சாலைகளிலும் முழங்காலுக்கு மேல் மழைநீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகனங்கள் பல இடங்களில் பழுதடைந்து நடுவழியில் நின்றன. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தெருக்கள் மற்றும் காலி மனைகளில் தண்ணீர் தேங்கியதால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தேங்கிய மழைநீரில் கழிவுநீரும் கலப்பதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் விரைந்து வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.