தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு ஒன்று, வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது. சுமார் 5 அடி நீளமுள்ள அந்தப் பாம்பை சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மடத்தூர் கல்லூரி நகர் பகுதியில் மங்கேஷ்பாபு என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் வளாகத்திற்குள் திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. பின்னர் அது அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் சென்று மறைந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி, சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் இசக்கிராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தவசி, ஜெயக்குமார், அஜித் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள நல்ல பாம்பை அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்பை திறம்பட மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.