துவரம் பருப்பு கொள்முதல் விலை தொடர்பாக உண்மைகளை மறைத்து, தற்போதைய ஆட்சியில்தான் குறைந்த விலையில் பருப்பு வாங்கப்பட்டதாக திமுக மீது அவதூறு பரப்பப்படுவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் கிலோ ரூ.109-க்கு கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பு, தற்போதைய அரசு ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும், இதன் மூலம் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து அரசுக்கு ரூ.750 கோடி சேமிப்பு ஏற்படும் என்றும் சில தகவல்கள் பரப்பப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விலை குறைப்புக்கு தற்போதைய அரசு காரணம் அல்ல என்றும், முந்தைய திமுக ஆட்சியே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பு கொள்முதல் விலை, படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.77.99 ஆக நிர்ணயிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பின்னணியை மறைத்துவிட்டு, தற்போதைய ஆட்சியில்தான் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக திமுக மீது குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் கொள்முதல் விலை குறித்தும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லிட்டர் ரூ.124.90-க்கும், டிசம்பரில் ரூ.121.95-க்கும், கடந்த மார்ச் மாதம் ரூ.136.95-க்கும் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதைய ஆட்சியில் கடந்த ஜூன் மாதம் லிட்டர் ரூ.154.99-க்கும், தற்போது ரூ.148-க்கும் பாமாயில் வாங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 3 மாதங்களில் லிட்டருக்கு ரூ.11 கூடுதல் விலை கொடுத்து பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், ரூ.600 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்திருக்கலாம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையை மறைத்து அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை குறைக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.