துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது வித்தியாசமான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கும் கதைகள் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் துல்கர் சல்மான். தமிழில் ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சமீபத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படமும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து சாதனை படைத்தது. தற்போது அவர் நடித்துள்ள ‘ஐயம் கேம்’ திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே, இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகும் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற நேரடி தெலுங்கு திரைப்படத்திலும் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இந்த நிலையில், இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடலான ‘வானே வானே’ ஏற்கனவே வெளியாகியுள்ளது. தரண் கே பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நகுல் அபயங்கர் இந்தப் பாடலை பாடியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் மற்றும் துல்கர் சல்மான் இணைந்து கேக் வெட்டி படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடினர். இந்நிலையில், துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.