தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கியுள்ளனர். இதனால் பயணிகளின் போக்குவரத்து வசதியைக் கருத்தில் கொண்டு, இன்று கூடுதல் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோவின் பச்சை, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று வழித்தடங்களிலும் வழக்கமாக மாலை 5 மணிக்குத் தொடங்கும் Peak Hour ரெயில் சேவை, இன்று மாலை 4 மணிக்கே தொடங்கும். மேலும், இந்தச் சிறப்பு சேவை இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதுதவிர, முனைய நிலையங்களில் இருந்து புறப்படும் கடைசி ரெயில்களின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் இரவு 11 மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12 மணி வரையும், மஞ்சள் வழித்தடத்தில் இரவு 9 மணிக்குப் பதிலாக 11 மணி வரையும் கடைசி ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் பயணிகள் எவ்வித சிரமமுமின்றி பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் மேற்கொள்ளும் வகையில், தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள வேண்டும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.