தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 20 புதிய வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, இளைஞர்களைக் கவரும் வகையில் புதிதாக 4 வெளிநாட்டு பீர் வகைகளும் விற்பனைக்குக் கொண்டுவரப்பட உள்ளன. தமிழக அரசின் டாஸ்மாக் மற்றும் எலைட் மதுபானக் கடைகளில் தற்போது 800-க்கும் மேற்பட்ட மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, பீர் உள்ளிட்ட உள்ளூர் தயாரிப்புகளுடன், பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது கிங்பிஷர், பிரிட்டிஷ் எம்பயர், எஸ்.என்.ஜே. 10000, ஸ்பீல் ட்ரிபிள் ஸ்ட்ராங், பிளாக் பேர்ல், டியூபார்க், கார்ல்ஸ்பெர்க், பட்வைசர், ஹேவர்ட்ஸ் 5000, காட்பாதர், பூம், மேக்ஸ் 11000, ஜிங்காரோ, கல்யாணி பிளாக் லேபிள், புல்லட், வுட்பெக்கர், பிளாக் பஸ்டர் உள்ளிட்ட 21 வகையான பீர்கள் விற்பனையில் உள்ளன. இந்நிலையில், தீபாவளி கால விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இதில், புதிதாக 20 மதுபான வகைகளை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பீர் வகைகளின் எண்ணிக்கை 21-ல் இருந்து 25 ஆக அதிகரிக்க உள்ளது. புதிதாக அறிமுகமாகும் பீர் வகைகள்: பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் நான்கு புதிய பீர் பிராண்டுகள் டாஸ்மாக் விற்பனைப் பட்டியலில் இடம்பெற உள்ளன. அவற்றில் கர்நாடகாவில் தயாரிக்கப்படும் ஹெய்னகென் சில்வர் (Heineken Silver), சத்தீஸ்கரில் இருந்து வரவுள்ள சிம்பா ரோர் (Simba Roar) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. புதிய பீர் வகைகளின் விலை குறைந்தபட்சம் ரூ.250-ல் இருந்து தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக, தீபாவளி பண்டிகையின்போது இந்தப் புதிய பீர் வகைகள் டாஸ்மாக்கின் எலைட் கடைகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் மதுபானக் கடைகளில் வழக்கத்தைவிட அதிகமான வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்பதால், புதிதாக அறிமுகமாகும் மதுபான வகைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.