திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த பேராசிரியர்களின் வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 7 பேராசிரியர்களின் வீடுகளில் பூட்டை உடைத்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திலேயே பேராசிரியர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், குடியிருப்புகளில் வசிக்கும் பேராசிரியர்கள் பலர் தங்களது வீடுகளைப் பூட்டிவிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, குடியிருப்புகளில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், 7-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். தீபாவளி விடுமுறை முடிந்து வீடு திரும்பிய பேராசிரியர்கள், தங்களது வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதையும், நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 7 பேராசிரியர்களும் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.