தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில் தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், பொதுமக்களுக்கு காய்கறித் தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார். சென்னை பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் 15-வது மெயின்ரோடு விற்பனை நிலையத்தில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 10 வகையான காய்கறிகள் கொண்ட தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நான்கு நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலமாகவும் இந்தத் தொகுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. காய்கறித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள்: - பெரிய வெங்காயம் – 500 கிராம் - தக்காளி – 500 கிராம் - கத்தரிக்காய் – 250 கிராம் - உருளைக்கிழங்கு – 250 கிராம் - கேரட் – 200 கிராம் - பீன்ஸ் – 200 கிராம் - பச்சை மிளகாய் – 100 கிராம் - எலுமிச்சை – 100 கிராம் - இஞ்சி – 50 கிராம் - தேங்காய் – 400 முதல் 450 கிராம் மொத்தம் 10 வகையான காய்கறிகள் அடங்கிய இந்தத் தொகுப்பின் எடை 2.55 முதல் 2.60 கிலோ வரை இருக்கும். இதன் விலை ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் தரம் பிரிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் எடையிடப்பட்டு தொகுப்புகளாகத் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் புதிய, தரமான காய்கறிகளை வெளிச்சந்தை விலையைவிட குறைந்த விலையில் வாங்கிப் பயன்பெற முடியும். கூட்டுறவு விற்பனை நிலையங்களின் வழக்கமான வேலை நேரங்களில் இந்தத் தொகுப்புகள் விற்பனை செய்யப்படும். அதிகமானோர் பயனடையும் நோக்கில், ஒரு நபருக்கு ஒரு காய்கறித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விற்பனை தடையின்றி நடைபெறுவதற்குத் தேவையான அளவு காய்கறித்தொகுப்புகளை இருப்பு வைக்கவும், விற்பனைப் பணிகளை முறையாக மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் அன்றாட சமையல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சிறப்புத் திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூட்டுறவுத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.