கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வட்டாரம் கைத்தறி நெசவுத் தொழிலில் முக்கியத்துவம் பெற்ற பகுதியாக திகழ்கிறது. சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான ஆலாங்கொம்பு, திம்மராயம்பாளையம், மூலத்துறை, வெள்ளிக்குப்பம்பாளையம், கிச்சகத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் பணியாற்றும் நெசவாளர்கள் காட்டன், கோரா காட்டன், மென்பட்டு, முகூர்த்த புடவைகள், வரவேற்பு புடவைகள், கிப்ட் புடவைகள் மற்றும் சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கைத்தறி துணிகளை பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் உருவாக்கி வருகின்றனர்.இதில் குறிப்பாக மென்பட்டு சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சிறுமுகை பகுதியில் தயாரிக்கப்படும் கைத்தறி பட்டுச்சேலைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்கும் காலத்தில் பட்டுச்சேலை உற்பத்தி பணிகள் வேகமெடுப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு கைத்தறி பட்டுச்சேலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த முறை புதிதாக 150 முதல் 200 வரையிலான டிசைன்கள் மற்றும் பேட்டர்ன்களில் பல்வேறு வண்ணங்களில் கைத்தறி பட்டுச்சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை காலத்திற்காக உருவாக்கப்படும் இந்த சேலைகளை பொதுமக்கள் வாங்குவதன் மூலம், நெசவுத் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தின் சிறுமுகை வட்டாரம் கைத்தறி பட்டுச்சேலை உற்பத்தியில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.