திரைப்படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் நடிகரான சிவகார்த்திகேயன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்துள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 2026 முதல் 2029-ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சங்கத் தலைவராக இருந்த இயக்குநர் கே.பாக்யராஜ் திடீரென மறைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஜூலை மாதத்தின் மத்தியில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சேரன் தலைமையிலான ‘நம்ம பாக்யராஜ்’ அணி வெற்றி பெற்றது. இதையடுத்து சங்கத் தலைவராக சேரனும், பொதுச் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகரும், பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜனும் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்று சங்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புதிய நிர்வாகிகள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றதுடன், சங்கத்தில் உறுப்பினராக இல்லாத திரைத்துறையினரையும் இணைத்து வருகின்றனர். அந்த வகையில், லெஜண்ட் சரவணன் சமீபத்தில் கவுரவ உறுப்பினராக சங்கத்தில் இணைந்தார். இந்த நிலையில், சிவகார்த்திகேயனும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்துள்ளார். இதுகுறித்து சங்கத் தலைவர் சேரன் தனது எக்ஸ் தளப் பதிவில், சிவகார்த்திகேயனை தாம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள விழாவில் பங்கேற்பது குறித்தும், மரியாதை நிமித்தமாகவும் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சங்கத்தில் இணைவதற்கான வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன், சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சில ஆலோசனைகளையும் வழங்கியதாக சேரன் தெரிவித்துள்ளார். மேலும், சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்வதாகவும் சிவகார்த்திகேயன் உறுதியளித்ததாக அவர் கூறியுள்ளார்.