சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்துக்குச் சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் வணிக வளாகத்துடன், திரையுலக பயன்பாட்டுக்குத் தேவையான நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக மாயாபஜார் ஹப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கட்டிடப் பணிகளுக்கான நிதியை திரட்டும் நோக்கில், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. சென்னை, ஐதராபாத், குஜராத் உள்ளிட்ட நகரங்களிலும், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் இந்த இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து, இலவசமாக இசை நிகழ்ச்சிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சி டிசம்பர் மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் விஜய்யை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சித் தொடருக்கான அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றும் முன்னணி பாடகர்கள், பாடகிகள் பங்கேற்றனர். மேலும், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா, அனிருத், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களை ஒரே மேடையில் இணைத்து நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.