திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக துணை நடிகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நவீன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ் (28). சினிமாவில் துணை நடிகராக நடித்து வந்த இவர், பட வாய்ப்புகள் இல்லாத சமயங்களில் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தார். பிரதீப் ராஜின் தாயார் ராணி, அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை பலருக்கு வட்டிக்கு கொடுத்து வந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே பணம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 27-ம் தேதி நவநீதம், பிரதீப் ராஜின் வீட்டுக்குச் சென்று ராணியிடம் பணத்தை கேட்டதாக தெரிகிறது. அப்போது பிரதீப் ராஜ், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் பணத்தை திருப்பித் தர முடியாது எனக் கூறி நவநீதத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவநீதம் தைராய்டு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பான புகாரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் ராஜை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு பிரதீப் ராஜ் திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், இருதரப்பினரையும் அழைத்து பேசி எச்சரித்து அனுப்பியுள்ளார். மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பது தொடர்பாகவும் இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்ததால், அந்த விவகாரத்திலும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் பிரதீப் ராஜ் நடந்து சென்றபோது, நவநீதத்தின் மகன் நவீன் தனது கூட்டாளிகளுடன் அவரை வழிமறித்துள்ளார். பின்னர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக நவீன் (32), அரி கிருஷ்ணன் (21), ஜாபர் (24), லோகேஷ் (27) ஆகிய 4 பேரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நவீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தாயார் நவநீதம் நடத்தி வந்த டிபன் கடைக்கு அருகே பிரதீப் ராஜும் அவரது நண்பர்களும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்ததாக கூறியுள்ளார். இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இருதரப்பினருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினையால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத் தகராறு உள்ளிட்ட முன்விரோதம் இருந்து வந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து பிரதீப் ராஜை கொலை செய்ததாக நவீன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, பிரதீப் ராஜின் உறவினர்கள் நேற்று திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளிக்கச் சென்றபோது போலீசார் தன்னை மிரட்டியதாக பிரதீப் ராஜ் பேசியதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.