திருவாரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை சட்டவிரோதமாக அபகரித்து விற்பனை செய்வதற்காக, அரசு நிலப் பதிவேடுகளில் திருத்தங்கள் செய்து போலி ஆவணங்கள் தயாரித்த மோசடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட சார் பதிவாளர் அளித்த புகாரின் பேரில், இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதில் சசிகுமார் மற்றும் திருவாரூர் இணை சார் பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அரசு ஆவணங்களில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த தகவல்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக போலியான விவரங்களைப் பதிவு செய்ய அதிகாரிகளுடன் இணைந்து சசிகுமார் திட்டமிட்டது தெரியவந்தது. இதன் மூலம் விருத்தாசலம் குமார தேவர் மடம், திருவாரூர் தட்சிணாமூர்த்தி மடம், சில கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அடியாக்கமங்கலம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் ஆகியவற்றின் பட்டாக்களை முறைகேடாக கைப்பற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அந்த நிலங்களையும் சசிகுமார் விற்பனை செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, விரிவான விசாரணைக்குப் பிறகு கடந்த 3-ம் தேதி சசிகுமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நில அபகரிப்பு மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் காணும் வகையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.