திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வீட்டுக்குள் புகுந்த குரங்கு, செல்போன் பார்த்துக் கொண்டிருந்த வியாபாரியிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வாழைப்பழத்தை கொடுத்து செல்போனை மீட்டுள்ளார். பொன்னேரி பஜார் பகுதியைச் சேர்ந்த பிரதீஷ்துரை (38), அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் கட்டிலில் படுத்தபடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டுக்குள் புகுந்த குரங்கு, அவரது கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீஷ்துரை, குரங்கை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றார். வேகமாக ஓடிய குரங்கு மரத்தில் ஏறி, அங்கிருந்து அருகிலிருந்த வீட்டின் மாடிக்குத் தாவியது. அதை விரட்டியபோது செல்போன் கவரை மட்டும் கழற்றி கீழே வீசியது. பின்னர் அருகிலிருந்த 2 வீடுகளை கடந்து 3-வது மாடிக்குச் சென்றது. குரங்கின் கையில் இருந்த செல்போனுக்கு பிரதீஷ்துரை போன் செய்தார். ரிங்டோன் சத்தம் கேட்டதும், குரங்கு செல்போனை கடிக்கத் தொடங்கியது. இந்த சம்பவத்தைப் பார்க்க அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். செல்போனை குரங்கிடம் இருந்து எவ்வாறு மீட்பது என தெரியாமல் பிரதீஷ்துரை தவித்தார். இந்நிலையில், சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு குரங்கை நோக்கி வாழைப்பழத்தை வீசினார். வாழைப்பழத்தை எடுத்துக்கொண்ட குரங்கு, தனது கையில் இருந்த செல்போனை கீழே வீசியது. இதையடுத்து பிரதீஷ்துரை செல்போனை மீட்டார். ஆனால், குரங்கு கடித்ததில் செல்போனின் டிஸ்ப்ளே உடைந்திருந்தது. பொன்னேரி பகுதியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் கூட்டமாக சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்கள், தின்பண்டங்களை எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.