திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் அமைந்துள்ள மலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில், ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில், புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.06 மணிக்கு பவுர்ணமி தொடங்குகிறது. மறுநாள் 26-ம் தேதி (சனிக்கிழமை) இரவு 10.44 மணிக்கு பவுர்ணமி நிறைவடைகிறது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இதையடுத்து பக்தர்களின் வசதிக்காக தேவையான அடிப்படை ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.