திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கமண்டல நாகநதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவுக்கு உட்பட்ட படவேடு கிராமத்தில் 62 அடி உயரம் கொண்ட செண்பகத்தோப்பு அணை அமைந்துள்ளது. ஜவ்வாது மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 57 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 57 அடிக்கு மேல் வரும் உபரிநீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று நண்பகல் 12 மணியளவில் உதவிப் பொறியாளர் ராஜ கணபதி தலைமையிலான அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டனர். தற்போது அணைக்கு வினாடிக்கு 100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, அலியாபாத் அணைக்கட்டு வழியாக ஏரிக்கால்வாய்க்கு திருப்பி விடப்படுகிறது. இதன் மூலம் சந்தவாசல், காங்கரானந்தல், கிருஷ்ணாவரம், களம்பூர், நாராயணமங்கலம், ஏரிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 16 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் செண்பகத்தோப்பு அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கமண்டல நாகநதி ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆற்றில் இறங்குதல், குளித்தல் மற்றும் ஆற்றைக் கடந்து செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.