திருவண்ணாமலை கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 8 வயது ஆண் யானை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருவண்ணாமலை கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 8 வயது ஆண் யானை

திருவண்ணாமலை கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 8 வயது ஆண் யானை

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு 8 வயதுடைய ஆண் யானை புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ருக்கு என்ற பெண் யானை பல ஆண்டுகளாக ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு வந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு செல்வதற்கு முன்பு ருக்குவிடம் ஆசீர்வாதம் பெறுவது வழக்கமாக இருந்தது. கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக்களின் போதும், அருணாசலேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் வீதியுலா செல்லும் முன்பாக ருக்கு கம்பீரமாக வலம் வரும். மகா தீபத் திருவிழாவின் போது தீப கொப்பரைக்கு ருக்கு ஆசீர்வாதம் வழங்கிய பின்னரே, அது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா தீபம் ஏற்றப்படும். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி கோவில் வளாகத்தில் ருக்கு உயிரிழந்தது. பின்னர் கோவிலுக்கு அருகிலேயே அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 7 வயதில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த ருக்கு, சுமார் 23 ஆண்டுகள் கோவில் பணிகளில் ஈடுபட்டது. தனது 30-வது வயதில் அது உயிரிழந்தது. ருக்கு மறைவுக்குப் பிறகு, ஆகம விதிகளின்படி அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மீண்டும் யானை கொண்டு வர வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ருக்கு உயிரிழந்து சுமார் 8 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் புதிய ஆண் யானை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அசாம் மாநிலத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வாகனம் மூலம் புறப்பட்ட இந்த யானை, நேற்று திருவண்ணாமலை வந்தடைந்தது. ஹீராலால் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண் யானைக்கு 8 வயது. சுமார் 6 அடி உயரம் கொண்டது. கோவிலுக்கு வந்த ஹீராலாலுக்கு ராஜகோபுரம் எதிரே கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் சிவாச்சாரியார்கள் தீபாராதனை நடத்தி சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து யானை மீது மலர்கள் தூவி வரவேற்றனர். இந்த நிகழ்வில் த.வெ.க. நிர்வாகிகள் சீதா சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் பழனி, இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய யானையின் வருகையையொட்டி ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கோவில் முன்பு திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ராஜகோபுரம் வழியாக திருமஞ்சன கோபுரம் சென்று, அங்கிருந்து யானை லாரியில் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டது. தமிழ்நாடு வனத்துறையின் தடையின்மைச் சான்று மற்றும் தேவையான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே யானை இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று நவம்பர் 24-ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் புதிதாக வந்துள்ள ஹீராலால், இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மாட வீதிகளில் வலம் வருமா அல்லது உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு வலம் வருமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.