திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாத 3 சிறுமிகளை போலீசார் சென்னையில் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் மாயம் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தராப்பட்டு கிராமத்தின் பஜனை கோவில் தெருவில், அசோக் குமார் - ஜோதி தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு மகள்களும், உறவினர் ஒருவரின் மகளும் அருகிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் இந்த மூன்று சிறுமிகளும் நேற்று பள்ளிக்குச் சென்ற நிலையில், மாலையில் வீடு திரும்பவில்லை. சிறுமிகளின் பெற்றோர் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உறவினர்கள் பல்வேறு இடங்களிலும், தெரிந்தவர்களின் வீடுகளிலும் தேடியுள்ளனர். ஆனால், சிறுமிகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் தீவிர தேடுதல் இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன மூன்று சிறுமிகளையும் தேடி வந்தனர். சென்னை கிளாம்பாக்கத்தில் மீட்பு இந்நிலையில், காணாமல் போன மூன்று சிறுமிகளும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதனால், சிறுமிகளைத் தேடி வந்த உறவினர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.