செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் செங்கண்மாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 2.30 ஏக்கர் நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில், திருப்போரூர் அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 2.30 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலத்தை குத்தகைக்கு பெற்ற நம்பிராஜ் என்பவர், ஒப்பந்த விதிகளை மீறி கோவில் நிர்வாகத்தின் அனுமதியின்றி 50-க்கும் மேற்பட்ட கடைகளை அமைத்துள்ளார். மேலும், அந்த கடைகளை சட்டவிரோதமாக உள்வாடகைக்கு விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் கோவிலின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த பிரச்சினை அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. குத்தகை ஒப்பந்தத்தை மீறியதன் அடிப்படையில், நம்பிராஜுக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து, நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 02.11.2026 அன்று அமைச்சர் உத்தரவின்படி, கூடுதல் ஆணையர் ரத்னா தலைமையில் நில அளவையர்கள் மூலம் கோவிலுக்குச் சொந்தமான நிலம் முழுவதும் அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின் மூலம் நிலத்தின் எல்லைகள் துல்லியமாக உறுதி செய்யப்பட்டு, அதனை மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாப்பது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு மீண்டும் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது போன்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.