திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கோவிலில் துப்பாக்கி ஏந்திய வீரனின் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் மூலம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தியதற்கான சான்று கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடுமலையை அடுத்த குறிஞ்சேரியில் குறிஞ்சேரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் காணப்படும் கற்சிற்பத்தில் வீரர் ஒருவர் இடது கையில் துப்பாக்கியையும், வலது கையில் குறுவாளையும் வைத்திருப்பதுடன், இடுப்பில் குத்துவாளும் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னரே துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்ததாக நிலவும் கருத்துக்கு மாறாக, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கற்சிற்பங்களில் வீரர்களின் கைகளில் துப்பாக்கி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தச் சிற்பம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி, உடுமலை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் மதியழகன் மற்றும் ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் கூறியதாவது: 16-ம் நூற்றாண்டின் இறுதியில் உடுமலை பகுதிக்கு வந்த தளி எத்தலப்ப மன்னரின் முன்னோர்கள் குறிஞ்சேரியில் தங்கியிருந்ததாகவும், பின்னர் தளியில் அரண்மனை அமைத்து ஆட்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தளிஞ்சியை ஒட்டிய இடத்தில், தளி எத்தலப்ப மன்னரின் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருமூர்த்திமலை, ஜிலோப்பநாயக்கன்பாளையம், பண்ணக்கிணறு, நல்லாம்பள்ளி, வாகைத்தொழுவு, செலவநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோன்ற புடைப்புக் கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் கோவிலிலும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண் ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற கற்சிற்பம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வகையான கற்சிற்பங்கள் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக இருந்துள்ளன. மேலும், குறிஞ்சேரியில் தளி பாளையப்பட்டு முன்னோர்கள் தங்கியிருந்ததாக ஆங்கிலேயர் கால வருவாய்த்துறை ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், குறிஞ்சேரி அம்மன் கோவிலில் உள்ள துப்பாக்கி ஏந்திய வீரனின் கற்சிலை 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், பாளையக்காரர் காலத்துடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. இது தளி எத்தலப்ப மன்னர் ஆட்சி செய்த காலகட்டத்துக்கும் பொருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை ஒருமுறை சுட்ட பிறகு மீண்டும் மருந்து நிரப்பி பயன்படுத்துவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே வீரர்கள் துப்பாக்கியுடன் வாள், குறுவாள் போன்ற ஆயுதங்களையும் வைத்திருந்ததை இந்தக் கற்சிற்பங்கள் மூலம் அறிய முடிகிறது.