திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார். தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா தனது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு வரும் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லெட்சுமணன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் தொகுதியில் 5 முனைப்போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக அக்கட்சியின் அமைச்சர்கள் தாராபுரத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று தாராபுரத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். இதற்காக தாராபுரம்-உடுமலை சாலையில் கொண்டரசம்பாளையம் மாருதி நகரில் 54 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட விஜய், மதியம் 1 மணியளவில் கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து பிரசார வாகனத்தில் தாராபுரம் நோக்கி புறப்பட்டார். விஜய் செல்லும் வழியில் குண்டடம், ஐ.டி.ஐ. கார்னர், அமராவதி சிலை ரவுண்டானா, பூக்கடை கார்னர், அண்ணாசிலை, தாராபுரம் போலீஸ் நிலையம், அலங்கியம் சிக்னல் மற்றும் உடுமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையோரம் திரண்டிருந்த மக்களை பார்த்து விஜய் கை அசைத்தபடி சென்றார். தாராபுரம் செல்லும் வழியில், த.வெ.க. கொடியின் நிறங்களில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட மாலையை தொண்டர் ஒருவர் வழங்கினார். அந்த மாலையை விஜய் பெற்றுக்கொண்டு தனது கழுத்தில் அணிந்துகொண்டார். இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி அணிகளாக தொண்டர்கள் திரண்டு, பிரசார பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி வருகின்றனர். மேலும், கோவை விமான நிலையத்தில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் பிரசார வாகனத்தில் விஜய் சென்றபோது, அவரிடம் மனு அளிப்பதற்காக பெண் ஒருவர் காத்திருந்தார். இதை கவனித்த விஜய், வாகனத்தை நிறுத்தி அந்த பெண்ணிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் தனது ரோடு ஷோவை தொடர்ந்து மேற்கொண்டார்.