திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், அதன் விலை திடீரென உயர்ந்துள்ளது. தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. போதிய மழை இல்லாததால் பல இடங்களில் தக்காளி செடிகள் காய்ந்துள்ளன. இதையடுத்து, விவசாயிகள் செடிகளை அகற்றி, அடுத்த பருவத்திற்கான பயிர்களை சாகுபடி செய்வதற்காக நிலங்களை உழுது தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தக்காளி சீசன் நிறைவடையும் நிலையில், பெரும்பாலான தோட்டங்களில் செடிகளில் போதிய அளவு பழங்கள் இல்லை. இதன் காரணமாக சந்தைக்கு வரும் தக்காளியின் அளவும் குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையானது. தற்போது அதே அளவிலான பெட்டி ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இதற்கு முன்பு 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.200-க்கும் குறைவாகவே விற்பனையானது. அந்த தொகையே தக்காளியை பறிப்பதற்கான கூலி மற்றும் மண்டிகளுக்கு கொண்டு செல்வதற்கான வாகன வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால் செய்த செலவைக்கூட திரும்பப் பெற முடியாமல் சிரமப்பட்டதாக தெரிவித்தனர். தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ள போதிலும், செடிகளில் போதிய பழங்கள் இல்லாததால் இந்த விலை உயர்வால் தங்களுக்கு பயன் இல்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், சந்தைக்கு தக்காளி வரத்து மேலும் குறைந்தால், வரும் நாட்களில் அதன் விலை இன்னும் அதிகரிக்குமோ என்ற கவலை பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.