திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட குமரலிங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், அப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். மழையின் தாக்கத்தால் தக்காளிச் செடிகளில் பூஞ்சை மற்றும் வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக அறுவடைக்குத் தயாரான தக்காளிப் பழங்களும் அழுகத் தொடங்கியுள்ளன. பொதுவாக மழை பெய்யாத காலங்களில் அறுவடை செய்யப்படும் தக்காளியை சுமார் 10 நாட்கள் வரை சேதமின்றி வைத்திருக்க முடியும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட தக்காளிப் பழங்கள் அறுவடை செய்த இரண்டு நாட்களிலேயே அழுகிவிடுகின்றன. இதனால் தக்காளியின் தரத்தைப் பொறுத்து சந்தை விலையிலும் கணிசமான வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தரமான பந்தல் தக்காளி 14 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்டு தரம் குறைந்த தக்காளிப் பெட்டிகள் ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகின்றன. குமரலிங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சந்தைக்கு கொண்டு வரப்படும் தக்காளிகளில் பெரும்பாலானவை அழுகிய நிலையில் இருப்பதால், அவற்றை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் விற்பனை செய்ய முடியாத தக்காளிகளை விவசாயிகள் சந்தை வளாகத்திற்கு வெளியேயும் சாலையோரங்களிலும் கொட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதுடன், அறுவடை செய்த தக்காளியையும் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.